Skip to main content

“உடனடியாக பணியை துவங்க வேண்டும்” - பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

Published on 07/05/2025 | Edited on 07/05/2025

 

Ramadoss letter to Prime Minister Modi for caste census

இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், “இந்தியப் பிரதமராகிய தங்களுக்கு இதுவரை இல்லாத வகையில், மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்திய மக்களுக்கு முழுமையான சமூகநீதியை வழங்கும் வகையில், நாடு முழுவதும் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த தங்கள் தலைமையிலான அரசு ஆணையிட்டிருப்பது தான் இதற்கு காரணம். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கப் பட்டதன் நோக்கங்களில் முதன்மையானது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு 1980&ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தை நான் தொடங்கிய போது, தொடக்கவிழாவில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான். அப்போது முதல் கடந்த 45 ஆண்டுகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் இயக்கங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் பா.ம.க. தான் நினைவுக்கு வரும் என்று கூறும் அளவுக்கு அதற்காக பாமக போராடியிருக்கிறது.

இந்தியாவின் பிரதமர்களாக இருந்த இராஜிவ்காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறேன். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான ஆணை பிறப்பிக்கப்படும் நிலை வரை வந்து, கடைசி கட்டத்தில் கைநழுவி போனது. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றது. ஆனால், கடைசி நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மாற்றாக சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளியிடப்படாததால் அதன் நோக்கம் வீணாணது.

2014ஆம் ஆண்டில் தாங்கள் பிரதமரான பிறகு தங்களிடமும் பலமுறை இதே கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன். அதன்பயனாக, 2018-&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31&ஆம் நாள், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,‘‘ இந்திய வரலாற்றில் முதன்முறையாக 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஓபிசி  சாதி விவரங்களும் சேகரிக்கப்படும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றது.

கொரோனா காரணமாக 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், அந்தக் கணக்கெடுப்பு எந்த ஆண்டில் நடத்தப்பட்டாலும் அது சாதிவாரி கணக்கெடுப்பாகத் தான் நடத்தப்பட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொண்டேன். 2019&ஆம் ஆண்டு அக்டோபர் 10&ஆம் நாள் உங்களை நான் தில்லியில் நேரில் சந்தித்த போது, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதைத் தொடர்ந்து 04.02.2020, 28.08.2021, 24.09.2024 ஆகிய நாள்களில் 2021&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தங்களுக்கு கடிதம் எழுதினேன்.

சாதிவாரி கணக்கெடுப்புக்காக நானும், பாட்டாளி மக்கள் கட்சியும் இடைவிடாமல் வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை, எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இந்தியாவில் சமூகநீதியை பாதுகாப்பதில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1931 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, கடந்த 95 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்காமல் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. காலப் போக்கில் இட ஒதுக்கீடு என்ற உன்னதமான தத்துவமே அழிக்கப்பட்டு விடும் பேராபத்து ஏற்பட்டிருந்தது.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றும் நோக்கத்துடன், 1990&ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை பல்வேறு வகையான இட ஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றங்களிலும் வழக்குகள் தொடரப்படும் போது, அவற்றை விசாரிக்கும் நீதிபதிகள் யதார்த்தத்தையோ, பயனடையும் சமுதாயங்களின் பின்தங்கிய நிலையையோ பார்ப்பதில்லை. மாறாக, இட ஒதுக்கீடு  பெறும் சமுதாயத்தின் மக்கள்தொகை இட ஒதுக்கீட்டின் அளவுடன் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில்  உள்ளதா? என்பதை மட்டுமே பார்ப்பார்கள். அதை நிரூபிப்பதற்கு தேவையான புள்ளிவிவரங்களை தாக்கல் செய்ய முடியாவிட்டால் இட ஒதுக்கீடு செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்தன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை எவ்வளவு? என்பது தெரியவரும். இந்த விவரம் துல்லியமாகத் தெரிந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கையும் தெளிவாகும். இத்தகைய புள்ளி விவரங்கள் தெளிவாகத் தெரியாததால் தான், சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு  50% என்ற உச்சவரம்பை கடந்த 63 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் திணித்து வந்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த உச்சவரம்பு நீக்கப்படக்கூடும். அவ்வாறு நீக்கப்படும் நாள் இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் நாளாக அமையும். அப்படி ஒரு வாய்ப்புக்கு, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக அடித்தளம் அமைத்திருப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் விரும்புகின்றனர். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தியாவில் சாதிவாரு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும் என்பதற்காக கால அட்டவணையை வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்