Skip to main content

'தமிழ்நாடே மகிழ்ச்சியாக இருக்கிறது; நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 07/05/2025 | Edited on 07/05/2025

 

 

'நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு' என்ற தலைப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக ஆட்சியின் நான்காண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமுக அரசின் திட்டங்களால் இன்று தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் தான் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக மட்டுமல்ல உற்சாகமாகவும் இருக்கிறேன். ஏனென்றால் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு நிமிர்ந்து நிற்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். நான் மன நிறைவோடு இருக்கிறேன். ஏனென்றால் தங்களுடைய குறைகளை காது கொடுத்து கேட்கப்படுகிறது தீர்க்கப்படுகிறது என தமிழ்நாட்டு மக்கள் மனநிறைவாக இருக்கிறார்கள்.

நான்காண்டுகளுக்கு முன்பு இதே மே ஏழாம் நாள் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். என் மேல் நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். இந்த ஆட்சியில் என்னவெல்லாம் இருக்கிறது என பட்டியலிட்டுவிட்டோம். எதெல்லாம் இல்லை என்று பட்டியல் போட வேண்டுமென்றால் வறுமை இல்லை; பட்டினி சாவு இல்லை; பணவீக்கம் இல்லை; பெரிய சாதிய மோதல்கள் இல்லை; மத கலவரங்கள் இல்லை; வன்முறைகள் இல்லை இப்படி சமூகத்தைப் பின்னோக்கித் தள்ளக்கூடிய தீமைகள் எதுவும் இல்லை இல்லை என்று சொல்லி தான் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.

அதேபோல் சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 214 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். பிறகு பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்தார். இறங்கும் பொழுது அனைவருக்கும் கையசைத்தபடியே இறங்கினார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர்.உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள். டி.ஆர். பாலு,ஆ.ராசா தயாநிதி மாறன், போக்குவரத்துத்துறைஅமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர்பாபு, அன்பில்மகேஷ் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்