Skip to main content

ஆயுதபூஜை, விஜயதசமி - ஆளுநர், முதல்வர் வாழ்த்து

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
ஆயுதபூஜை, விஜயதசமி - ஆளுநர், முதல்வர் வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ்: ஆயுத பூஜையானது அல்லவைகளை வெற்றி கொண்ட தினமாகவும், விஜயதசமியானது குழந்தைகள் தங்களது கற்றலைத் தொடங்கும் புனித தினமாகவும் கருதப்படுகிறது. மேலும், இந்த தினத்தில் இளைஞர்கள் புதிய தொழில் உள்ளிட்ட வாழ்வாதாரத்துக்குத் தேவையானவற்றைத் தொடங்குவர்.

அறிவு எனும் விளக்கை ஏற்றவும், கற்றல் பரவிடவும், அறிவு, திறன் மேம்பாடு, புதுயுக சிந்தனைகள் ஆகியன இந்தப் பண்டிகைகளில் வளர்ந்து மேம்படட்டும். இதனால், அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி, நல்லெண்ணம் வளரட்டும்.

தமிழக மக்களுக்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கும் எனது ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: மக்கள் தங்கள் வாழ்வில் ஆற்றலில் மிகுந்து, செல்வத்தில் சிறந்து, கல்வியில் உயர்ந்து விளங்க வேண்டி, ஆற்றலின் வடிவமாக மலைமகளையும், செல்வத்தின் வடிவமான திருமகளையும், அறிவின் வடிவமாம் கலைமகளையும் பக்தியுடன் வழிபட்டு, நவராத்திரி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுவர்.

உழைக்கும் தொழிலாளர்கள் தாங்கள் செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, தொழிலுக்கு அத்தியாவசியமாக விளங்கும் கருவிகளையும், இயந்திரங்களையும் பூஜைக்குரிய பொருள்களாக வைத்து வணங்குவர். ஆயுத பூஜைத் திருநாளான இந்த நாள் உழைப்பின் சிறப்பை போற்றும் திருநாளாகவும் விளங்குகிறது.

வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளன்று கல்வி, கலை, தொழில்களைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்ற இறை நம்பிக்கையோடு மக்கள் புதிய முயற்சிகளுக்கு வித்திட்டு நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை கொண்டாடி மகிழ்வர்.

இந்த பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ எனது வாழ்த்துகள் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்