
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரிப் பள்ளியால் மாவட்டமே தலைகீழாக மாறிப் போனது. இதனால் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வேதனையுடன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மாற்றுவதுடன் நிர்வாகத்தையே மாற்றி அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் வேதனையோடு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அதாவது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரின் மையப்பகுதியில் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதிரிப் பள்ளியாக மாற்றி தேவையான கட்டமைப்பு வசதிகளையும் ஒரு பாடத்திற்கு 2 நிரந்தர ஆசிரியர்களையும் நியமனம் செய்துள்ள அரசு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடும் வழங்கி வருகிறது. இந்தப் பள்ளியைப் பார்த்து மற்ற பள்ளிகள் மாற வேண்டும் என்பதே அரசின் மாதிரிப் பள்ளிகளின் நோக்கமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு +2 தேர்வு முடிவுகள் வெளியான போது மாவட்ட அதிகாரிகளும் அறந்தாங்கி நகர மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது 166 மாணவர்கள் +2 படித்த நிலையில் 59 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 107 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை அதாவது ஒரு மாதிரிப் பள்ளியில் 35% மாணவர்களே தேர்ச்சி என்ற தகவல் தான் அதிர்ச்சிக்குக் காரணமாக உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று (13.05.2025 - திங்கள் கிழமை) அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், இந்தப் பள்ளியில் படித்த ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் பணிகளில் உயர்ந்த இடத்தில் உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சியைப் பார்க்கும் போது வேதனையும் அதிர்ச்சியுமாக உள்ளது. தமிழ்நாடு அரசு மாணவர்களின் கற்றுலுக்கு தேவையான வசதிகளையும் தேவைக்குக் கூடுதலான ஆசிரியர்களையும் வழங்கி உள்ளது. இந்தப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வண்ணம் செயல்பட்டு தனியார்ப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் நோக்கத்திலும் இந்த செயலை செய்திருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. ஆகவே நிர்வாக சீர்கேட்டில் உள்ளவர்களை பணியிடமாற்றம் செய்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பள்ளிக்குக் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி (21.02.2024) அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா திடீர் ஆய்வுக்கு வந்த போதும் அதிர்ச்சியடைந்து தனது வேதனையை வெளிப்படுத்தினார். அதாவது வகுப்பறைகளில் ஒழுக்கமின்மை, மாணவர்களுக்கு வாசித்தல் திறன் இல்லை, பெஞ்சுகள் இல்லாத வகுப்பறையில் தரையில் அமர்ந்திருந்த மாணவர்கள், குடிநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படவில்லை, வகுப்பறை அருகே தீப்பெட்டி, வளாகத்தில் மாடிப்படி அருகே குவிந்து கிடந்த குப்பைகள், உடைந்து கிடந்த ஆய்வக சிமென்ட் மேஜைகள் என அனைத்தையும் பார்த்து இது மாதிரிப் பள்ளி இல்லை மோசமான பள்ளியாக உள்ளது. எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று எச்சரித்துச் சென்றார். ஆனால் இன்றும் அந்தப் பள்ளி மாறவில்லை. மாறாக மாவட்டத்தையே தலைகுனிய வைத்துவிட்டது. இதற்குக் காரணமான அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெற்றோர்களும்.

இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி போல ஏராளமான பள்ளிகளில் பல ஆண்டுகளாகப் பாட ஆசிரியர்களே இல்லாமல் தற்காலிக ஆசிரியர்களின் உதவியோடு இன்றுவரை சாதித்து வரும் நிலையில் அறந்தாங்கி மாதிரிப் பள்ளியில் அனைத்து வசதிகளுடன் பாடத்திற்கு 2 ஆசிரியர்கள் இருந்து இப்படித் தோல்வியுற்றது வேதனை தான். கல்வித்துறை அமைச்சர் உடனே தலையிடாவிட்டால் இந்த மாதிரிப் பள்ளியைப் பார்த்து மற்ற பள்ளிகளும் மாற வாய்ப்புள்ளது.