(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக (டீன்) மருத்துவர் திருமால்பாபு இன்று (ஜனவரி 29, 2019) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு கடந்த செப். 12, 2018ம் தேதி, புதிய முதல்வர்களை நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயவியல் துறைத்தலைவராக பணியாற்றி வந்த மருத்துவர் திருமால்பாபு முதல்வராக நியமிக்கப்பட்டார்.
சேலம் தவிர மற்ற இடங்களில் புதிய முதல்வர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மருத்துவர் திருமால்பாபு, வேலூர் அரசு மருத்துவமனையில் இருதயவியல் துறைக்குத் தேவையான கேத்லேப் தொடங்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாக புதிய பணியிடத்தில் பொறுப்பேற்றுக் கொள்வதில் தாமதம் ஆனது. அதனால், சேலத்தில் மருத்துவர் எம்.கே.ராஜேந்திரன் தற்காலிக முதல்வராக இருந்து வந்தார்.
இந்நிலையில், மருத்துவர் திருமால்பாபு சேலம் அரசு மருத்துவமனையில் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கவும், மருத்துவமனையின் சிறப்பான செயல்பாடுகளுக்கும் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று சக மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். மருத்துவர்கள், ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.