Skip to main content

பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இதனையொட்டி அவர் இன்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

 

அதன்தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

 

இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்யவுள்ள நான்காவது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்ந்ததற்காக நிதியமைச்சருக்கு நன்றி" -ப.சிதம்பரம்!

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

p chidambaram

 

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி உட்பட பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள், பூஜ்ஜிய பட்ஜெட் என இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை கடுமையாக தாக்கியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது...

 

இன்றைய பட்ஜெட் உரை, இதுவரை ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்டதிலேயே மிகவும் முதலாளித்துவமான உரையாகும். பாரா 6 இல் மட்டும் 'ஏழை' என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது. இந்த நாட்டில் ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை நினைவுகூர்ந்ததற்காக நிதியமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த முதலாளித்துவ பட்ஜெட்டை மக்கள் நிராகரிப்பார்கள்.

 

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை நிதியமைச்சர் கோடிட்டுக் காட்டுவது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. நிகழ்காலம் குறித்து கவனம் செலுத்த தேவையில்லை என நம்புவது போலவும், பொறுமையாக காத்திருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளலாம் எனவும் அரசாங்கம் நம்புவதுபோல இருக்கிறது. இது இந்திய மக்களை கேலி செய்யும் செயல்.

 

ரிசர்வ் வங்கிக்கு பதிலாக, இன்று முதல் கிரிப்டோகரன்சி சட்டப்பூர்வமானது என நிதியமைச்சர் கிட்டத்தட்ட அறிவித்து விட்டார். இப்போது இவை எதுவுமே 99.99% இந்திய மக்களுக்கு பயனளிக்கவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

"மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நிர்மலா சீதாராமன்!

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

nirmala sitharaman

 

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை பிரதமர் மோடி உட்பட பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள், பூஜ்ஜிய பட்ஜெட் என இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன், வரியை அதிகரித்து ஒரு பைசாவைக்கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; வரி விகிதத்தில் எந்த குறைப்பையும் கொண்டுவரமுடியாமல் போனதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் சில நேரங்களில் வரி குறைக்கப்படும். சில நேரங்களில் மக்கள் அதற்காக காத்திருக்க வேண்டும். இந்தாண்டு வரியை அதிகரித்து ஒரு ரூபாயைக் கூட சம்பாதிக்க நான் முயலவில்லை. கடந்த வருடமும் அவ்வாறு செய்ய முயலவில்லை.

 

நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், தொற்றுநோய் காலத்தில், மக்கள் மீது வரி சுமையை சுமத்தக்கூடாது என பிரதமர் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார். பணவீக்கம் பற்றிய எங்கள் பார்வையில் கோல் மால் இல்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, சாமானியர்கள் சிரமங்களை சந்திப்பார்கள்தான். ஆனால் சமையல் எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ள உடனடியாக செயல்பட்டு இறக்குமதி வரிகளை குறைத்தோம். பணவீக்கம் நிலையான அடிப்படையில் 6 சதவீத இலக்கை தாண்டவில்லை.

 

ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். அதற்கு வெளியே உள்ள அனைத்தும் தனிநபர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்களாகும். அந்த சொத்துக்களின் பரிவர்த்தனைகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி விதிக்கிறோம். எவையெல்லாம் கிரிப்டோ, எவையெல்லாம்  கிரிப்டோ சொத்துக்கள் என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது. டிஜிட்டல் சொத்துகள் பற்றிய விவரம் ஆலோசனைக்கு பிறகு வெளியாகும்.

 

ஒவ்வொரு கிரிப்டோ சொத்துக்களின் பரிவர்த்தனையிலும் 1% டிடிஎஸ் விதிப்பதன் மூலம் பணத்தின்  தடத்தையும் நாங்கள் கண்காணிக்கிறோம். கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான தகவல்களுக்காக மற்ற நாடுகளுடன் வங்கிக்கணக்குகள் வாரியாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.