/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_50.jpg)
தமிழக பாஜக வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் சொகுசு கார்கள் பற்றி டெல்லி தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளன. இது குறித்து பாஜக தேசிய தலைமை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் 4 இனோவா கார்கள் இருக்கின்றன. கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் இதில் ஒரு இனோவாவை பயன்படுத்தி வந்தார். இதற்கு கட்சி தலைமையும் அனுமதித்தது. மற்ற 3 கார்களும் பாஜக வி.ஐ.பி.க்களுக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, இந்த 4 இனோவாக்களும் அலுவலக பயன்பாட்டிற்காக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, பாஜக பிரமுகர் கோவர்த்தனன், டொயோட்டா பார்ச்சுனர் சொகுசு கார் ஒன்றை கேசவ விநாயகத்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார். அதாவது, க்ரைம் கான்டாவெர்சி சூழந்த கோவர்த்தனன் மீது எந்த புகார்கள் சென்றாலும் அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கேசவ விநாயகத்திற்கு இந்த சொகுசு காரை பரிசளித்தார் கோவர்த்தனன் என்று கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றிக்காக சென்னையிலிருந்து கடத்தப்பட்ட 4 கோடி வில்லங்க விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையை எதிர் கொண்டவர் இந்த கோவர்த்தனன். இப்போதும் அந்த வழக்கின் விசாரணை இவரைச் சுற்றி இருந்து வருகிறது. அந்த கோவர்த்தனன் தான் கேசவ விநாயகத்திற்கு பார்ச்சுனர் காரை பரிசளித்தார். அந்த காரைத்தான் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கேசவ விநாயகம் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், கேசவ விநாயகம் கடந்த ஒரு வாரமாக அந்த காரை பயன்படுத்தாமல், தி.நகரில் ரகசியமாக ஒரு இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார்.
இது குறித்து கமலாலய வட்டாரங்களில் சீக்ரெட்டாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாமும் இதன் பின்னணிகளை விசாரித்த போது, " இல.கணேசனின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், கமலாலயத்தில் தங்கினார். அப்போது, கேசவ விநாயகத்தின் பார்ச்சுனர் சொகுசு காரைப் பார்த்து, யாருடையது இந்த கார்?' என விசாரிக்க, 'கேசவ விநாயகத்துக்கு கோவர்த்தனன் அன்பளிப்பாக கொடுத்துள்ளார் என சொல்லியிருக்கிறார்கள். அப்போது, கட்சிக்கென 4 கார்கள் இருக்கும் போது அவருக்கெதற்கு தனிப்பட்ட முறையில் கார் ? அப்படின்னா... அவருக்கு லஞ்சமாக இந்த கார் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என கோபமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அலுவலக நிர்வாகிகள் மெளனமாக இருந்துள்ளனர். அந்த மெளனத்தின் அர்த்தம் புரிந்த பி.எல்.சந்தோஷ், கேசவ விநாயகத்தை அழைத்து கண்டித்தார். மேலும், காரின் தேவை இருந்தால் கட்சி பணத்தை எடுத்து கட்சியின் பெயரில் கார் வாங்கி பயன்படுத்த வேண்டியதுதானே? எதற்காக அன்பளிப்பு வாங்கினீர்கள்? முதலில் அந்த காரை திருப்பிக் கொடுங்கள் என கடிந்து கொண்டார். பின்னர் பி.எல்.சந்தோஷ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு டெல்லிக்கு சென்று விட்டார். ஆனால் கேசவ விநாயகத்தை பி.எல்.சந்தோஷ் கண்டித்தும் காரை திருப்பித் தரவில்லையாம். இந்த சூழலில், கோவர்த்தனன் பற்றியும் அவர் கார் பரிசளித்ததிருப்பது குறித்தும் மேலதிக தகவல்களை டெல்லிக்கு புகார்களாக சிலர் அனுப்பி வைத்துள்ளனர். அந்த புகார்கள் சந்தோஷ் பார்வைக்குச் சென்றுள்ளது. இது குறித்து பி.எல்.சந்தோஷ் சீக்ரெட்டாக விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். இதனையறிந்த கேசவ விநாயகம், பயந்து போய் உடனடியாக அந்த பார்ச்சுனர் காரை மறைத்து விட்டார். அதாவது, தி.நகரில் பாஜகவினர் சீக்ரெட் ஆலோசனை நடத்துவதற்காக ஒரு இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தில் இந்த காரை நிறுத்தி வைத்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/107_60.jpg)
இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் பாஜக நடத்திய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சென்னை வந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பயன்படுத்த விலை உயர்ந்த ரோல்ஸ் ராய் காரை கோவர்த்தனன் கொடுத்திருந்தார். இந்த சொகுசு கார், பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட கார். வரிச் சலுகை கிடைப்பதற்காக கோவர்த்தனன் பாண்டிச்சேரியில் பதிவு செய்திருந்தார் . பாஜக மேலிடத்தில் செல்வாக்கு மிக்க பவன் கல்யாணின் நட்பினை பெறுவதற்காக தனது ரோல்ஸ் ராய் காரை கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த அந்த காரும் சர்ச்சையானது. இது குறித்த புகாரும் ஏற்கனவே டெல்லிக்குப் சென்றிருக்கிறது. ஆக, கோவர்த்தனன் வழங்கிய 2 கார் சம்பவங்களும் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது" என்று பின்னணிகளை விரிவாகச் சுட்டிக்காட்டுகின்றன விவரமறிந்த பாஜகவினர்.
இதற்கிடையே இந்த கார்கள் சம்பவத்தில் கோவர்த்தனின் பிஸ்னெஸ் டீலிங்கை, தமிழக உளவுத்துறையும் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)