Police are intensively interrogating Poovai Jaganmoorthy and AD.GP Jayaram

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (16.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன் முன்பு, இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமனைக் கைது செய்யுங்கள் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனைக் காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். தற்போது போலீசார் விசாரணையில் ஜெயராமன் உள்ளார்.

Advertisment

அதன் பின்னர் அங்கிருந்து திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு ஜெயராமன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் தொடர்ந்து 12 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் இந்த விவகாரத்தில் அவருக்கு எவ்வாறு தொடர்பு உள்ளது? பூவை ஜெகன் மூர்த்திக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா?, ஆள் கடத்தலுக்கு ஏ.டி.ஜி.பி. ஜெயராமனின் கார் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் அப்பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மற்றொரு புறம் பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்காக திருவலங்காடு காவல் நிலையத்திற்கு இன்று (17.06.2025) காலை 09:00 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் 12 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் திருத்தணியில் இருந்து ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை திருவலாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2 பேரிடமும் தனித்தனியாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது காவல் ஆய்வாளர் அறையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனிடமும், உதவி ஆய்வாளர் அறையில் ஜெகன்மூர்த்தியிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் இருவரிடமும் டி.எஸ்.பி. தனித்தனியாகக் கேள்விகளை முன்வைத்துப் பதிவு செய்து வருகிறார்.