revenge after 50 years classmate who beat him up  4th grade kerala

Advertisment

4ஆம் வகுப்பு படித்த போது ஏற்பட்ட சண்டைக்கு 50 வருடங்களுக்குப் பிறகு பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 62 வயதான வி.ஜே.பாபு. இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாலோமின் நாடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, இவரது வகுப்பு தோழரான பாலகிருஷ்ணனை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு காலம் உருண்டோடியது.

வகுப்பு தோழர்களான வி.ஜே.பாபு, பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ வலியப்ளாக்கல் என்ற நபரும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல் மூவரும் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஹோட்டல் முன்பு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, நான்காம் வகுப்பு சம்பவம் குறித்து பாபுவுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்த விவகாரம் தீர்க்கப்பட்டாலும், கடந்த 2ஆம் தேதி பாலகிருஷ்ணனும் மேத்யூவும், மீண்டும் பாபுவை சந்தித்தனர். அப்போது, 4ஆம் வகுப்பில் ஏன் தன்னை தாக்கினீர்? என்று கேட்டு பாலகிருஷ்ணனும் மேத்யூவும் சேர்ந்து பாபுவை தாக்கியுள்ளனர். பாலகிருஷ்ணன் பாபுவின் காலரைப் பிடித்துக் கொண்டதாகவும், மேத்யூ அவரது முகத்திலும் முதுகிலும் கல்லால் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாபு உடனடியாக மீட்கப்பட்டு கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.