புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை! : முலாயம் சிங் யாதவ்
இன்று புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார் முலாயம் சிங் யாதவ்.
அப்போது பேசிய அவர், ‘இப்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை. என் மகன் என்கிற பட்சத்தில் எனது ஆசீர்வாதங்கள் எப்போதும் அகிலேஷ் யாதவிற்கு உண்டு. ஆனால், அவரது முடிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை’ என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தட்டிக்கேட்டால் மாணவிகளின் மீது தாக்குதல்களை ஏவிவிடுகிறது யோகி அரசு. யோகியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி.
மோடி தான் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அவரது ஆட்சியில் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வான்முட்டும் அளவிற்கு பெட்ரோலின் விலையானது உயர்ந்துள்ளது’ என குற்றம்சாட்டியுள்ளார்.
லோக் தளம் கட்சியின் தலைவர் சுனில் சிங், ‘வரும் திங்கள்கிழமை லோஹியாவில் செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார் முலாயம் சிங். அந்த சந்திப்பில் லோக் தளம் கட்சியோடு இணைந்து தனது புதிய கட்சி குறித்த தகவலை வெளியிடுவார்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில், முலாயம் சிங் புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை என தெரிவித்திருக்கிறார்.
- ச.ப.மதிவாணன்