Skip to main content

‘குஜராத் மாடல் என்பதே வார்த்தை ஜாலம்தான்!’ - குஜராத் முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா

Published on 17/10/2017 | Edited on 17/10/2017
‘குஜராத் மாடல் என்பதே வார்த்தை ஜாலம்தான்!’ - குஜராத் முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா

சமீபகாலமாக பாஜக-வைச் சேர்ந்த மூத்த தலைவர்களே, ஆளும் பாஜக அரசையும், பிரதமர் மோடி அமுல்ப்படுத்திய திட்டங்களையும் விமர்சித்து வருகின்றனர். அவர்களில் பாஜக மூத்ததலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் பேசியிருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் விரிவாக அளித்திருந்த பேட்டியில், 

“மத்திய தணிக்கைக் குழு 2004ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், குஜராத் மாநில நிதிச்சூழலில் நிலவும் ஒழுங்கற்ற தன்மையை சீர்செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்போதைய காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தின் கடன்தொகை ரூ.4000 முதல் ரூ.6000 வரை இருந்தது. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் நிதி மாநில நிதி பொறுப்பு சட்டம் 2005ன் படி குஜராத் மாநிலத்தின் கடன்தொகை ரூ.1லட்சத்து 98ஆயிரம் கோடியாக உள்ளது. குஜராத் மாநிலம் இதை ஒழுங்குபடுத்துவதைத் தவிர்க்கும்போது அது அந்த மாநிலத்தை மிகப்பெரிய நிதிநெருக்கடிக்குள் தள்ளிவிடும் என மத்திய தணிக்கைக் குழு எச்சரித்ததுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. 

குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் மானியம் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. 2006-07 காலகட்டத்தில் ரூ. 408 கோடியாக இருந்தநிலையில், 2016-17 காலகட்டத்தில் அது வெறும் ரூ. 80 கோடியாக குறைந்திருக்கிறது. 

அதேசமயம், பெட்ரோகெமிக்கல் துறைகளின் பெருமுதலாளிகளான அதானி மற்றும் அம்பானிக்கு வழங்கும் மானியங்கள் பத்து ஆண்டுகளில் ரூ.1,873 கோடியில் இருந்து ரூ. 4,471 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் இருந்தே தெரியவேண்டாமா குஜராத் அரசு எதற்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று? அதனால்தான் குஜராத் மாடல் என்பதெல்லாம் வார்த்தை வித்தை என்று சொல்கிறேன்”  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுரேஷ் மேத்தா குஜராத் மாநிலத்தின் முதல்வராக பணியாற்றியவர். மேலும், மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்