CM MK Stalin says Only the Dravidian model of govt will survive in TN

நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளைத் தொடங்கி வைத்தார் வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 32 வாகனங்களின் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அதன் செயல்பாடுகள் குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் தொடர்ச்சியாக நேற்று (15.05.2025) ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “5 நாள் பயணம் மிகச் சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.

Advertisment

அதே நேரத்தில் மக்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவு தராங்கங்கறது நீலகிரி மாவட்டத்தில் இருக்கிற மக்கள் மட்டும் இல்லை, இங்கே சுற்றுலாப் பயணிகளாக வரக்கூடிய மக்களும் எழுச்சியை ஆதரவை வெளிப்படுத்துனப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. மலர் கண்காட்சியை நீண்ட நேரம் ரசித்துப் பார்த்தேன் என்பதே சிறப்பாக இருந்தது என்று தானே அர்த்தம். மிகச் சிறப்பா இருந்தது. எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் கருத்துக் கேட்டது தொடர்பாக மற்ற மாநிலத்தின் முதலமைச்சர்கள், தலைவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.

மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரப்போக்கை கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து தான் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். ப. சிதம்பரம் இந்தியா கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறியுள்ளது. அவருடைய கருத்து ஆகும் 2026 தேர்தல் மட்டுமல்ல 2031, அதுக்கப்புறம் வர 2036 எல்லாமே திராவிட முன்னேற்ற ஆட்சி தான். திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும். குன்னூரில் ஹாக்கி கிரவுண்ட் தொடர்பாக ஏற்கனவே விளையாட்டுத்துறை அமைச்சர் இங்கே வந்தபோது வைத்த கோரிக்கை எல்லாம் பரிசீலனையில் உள்ளது. அதெல்லாம் நிச்சயமா நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.