/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/64_62.jpg)
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் முறைகேடுகளை அம்பலப்படுத்திய உதவி பேராசிரியரை, 'ஊழல் புகழ்' துணை வேந்தர் ஜெகநாதன், திடீரென்று பணியிடைநீக்கம் செய்த விவகாரம், உயர் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், ஜெகநாதன். இவர் கடந்த 1.7.2021ம் தேதி இப்பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலம் 30.6.2024 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் 11 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. அதன்படி, வரும் 19 ஆம் தேதியுடன் ஜெகநாதனின் துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவு அடைகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/63_58.jpg)
இது ஒருபுறம் இருக்க, துணை வேந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தில் புதிய பணி நியமனங்கள், பதவி உயர்வு மற்றும் கொள்கை முடிவுகள் சார்ந்த நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என கடந்த 2017ஆம் ஆண்டு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் துணைவேந்தர் ஜெகநாதன், உயர் கல்வித்துறை உத்தரவை மீறி, கடந்த மார்ச் மாதம் புதிதாக பதிவாளர், தேர்வாணையர் ஆகிய பதவிகளை நிரப்புவதற்கான பணிகளை முன்னெடுத்து வந்தார். அதிலும், பதிவாளர் பதவிக்கு, தனக்கு நெருக்கமான விஸ்வநாதமூர்த்தி என்பவரை கொண்டு வருவதற்கான முயற்சிகளை திரை மறைவில் செய்து வந்ததாகவும் புகார்கள் கிளம்பின.
இந்த விதிமீறல் குறித்து, அகில இந்திய பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினரும், பெரியார் பல்கலை பொருளியல் துறை உதவி பேராசிரியருமான வைத்தியநாதன், தமிழக அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், துணைவேந்தர் ஜெகநாதன் விதிகளை மீறி புதிய பணி நியமனங்களுக்கான நேர்காணலை நடத்த உள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கடிதம் தொடர்பான செய்தி, ஊடகங்களிலும் வெளியானது.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் சாசன விதிகளுக்கு எதிராகவும், பல்கலையின் நிர்வாகம் சார்ந்த ரகசியங்களை வெளியிட்டதாகவும் கூறி, உதவி பேராசிரியர் வைத்தியநாதனை திடீரென்று நேற்று (மே 15, 2025) பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ஜெகநாதன். துணைவேந்தரின் பதவிக்காலமே அடுத்த மூன்று நாள்களில் முடிவடைய உள்ள நிலையில், அவர் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் வைத்தியநாதனை பணியிடைநீக்கம் செய்திருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/65_72.jpg)
இது தொடர்பாக உதவி பேராசிரியர் வைத்தியநாதனிடம் கேட்டோம். “பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், முன்னாள் பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட சிலரும் தமிழக அரசு மற்றும் பல்கலை சிண்டிகேட் குழுவின் ஒப்புதல் பெறாமல், பல்கலைக்கழக கட்டடத்தை ஆக்கிரமித்து, பியூட்டர் பவுண்டேஷன், ஆப்டெக் ஆன் போரம் ஆகிய நிறுவனங்களை சொந்த பெயர்களில் தொடங்கினர். மேலும், பட்டியலின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையில் 2.66 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கும், சாதி வன்கொடுமை வழக்கும் அவர்கள் மீது உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளில் நான் அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளேன்.
ஜெகநாதனின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் அவர் புதிதாக பணி நியமனங்கள் தொடர்பான செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்த உத்தரவை மீறி அவர் செயல்பட்டது தொடர்பாக நான் சார்ந்த சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு புகார் அனுப்பினேன். ஆனால், பெரியார் பல்கலையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன் என்பதால் என்னை முடக்கும் உள்நோக்கத்துடன், அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு 3 நாள்களே உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்து வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் புகாரில் சிக்கிய துணைவேந்தருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மாளிகைக்கே நேரில் அழைத்து, பிரிவு உபச்சார விழா நடத்தியது தவறான முன்னுதாரணம் ஆகும். என் மீதான பணியிடைநீக்க உத்தரவை தமிழக அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சட்ட ரீதியாகவும் அணுக உள்ளேன்,'' என்றார்.
உயர்கல்வித்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட, மெத்தப்படித்த துணைவேந்தர் ஜெகநாதன், பதவிக்காலம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் சாமானியர்களைப் போல பழிவாங்கும் நோக்கத்துடன் உதவி பேராசிரியரை பணியிடைநீக்கம் செய்துவிட்டதாக உயர் கல்வித்துறை வட்டாரத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)