
மனைவியைக் கொன்று தீ வைத்து எரித்துவிட்டு கணவன் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலம், சிம்லாவில் உள்ள கன்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் டோட்டா ராம். இவர் பாதுகாவலராகப் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி குல்ஷன் (26). இந்த நிலையில், தனது மனைவி குல்ஷனை காணவில்லை என ராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், தனது வீட்டின் முற்றத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் டோட்டா ராமின் நடவடிக்கைகள் இருந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இது குறித்து உடனடியாக குல்ஷனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த குடும்பத்தினர், ராமின் வீட்டின் முற்றத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது, தோண்டப்பட்ட ஒரு குழி இருந்துள்ளது. அந்த குழியைத் தோண்டி பார்த்த போது, அதில் பாதி எரிந்த நிலையில் குல்ஷனின் உடலை குடும்பத்தினர் கண்டுள்ளனர். இதனை பார்த்த குடும்பம் கதறி அழுதது.
இதனையடுத்து, குல்ஷனின் குடும்பத்தினர் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குல்ஷனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, ராமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெயிண்ட் மற்றும் மரக்கட்டையை வைத்து உடலை தீ வைத்து எரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். வரதட்சணை கேட்டு குல்ஷனை ராம் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக குல்ஷனின் குடும்பத்தினர் போலீசிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரிலும், போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.