
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.
கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடந்ததற்கு பிறகு, எந்தவொரு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்காமல் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது முதல் முறையாக ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஹோண்டுராஸ் தூதரக திறப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதன் மூலம் நாங்கள் அடைய நினைத்த இலக்குகளை அடைந்துள்ளோம். முக்கிய இலக்குகள் அடையப்பட்டதில் இருந்து நாங்கள் நியாயமான நிலைப்பாட்டை எடுத்தோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்குவதே எங்கள் இலக்கு, ராணுவத்தை அல்ல.. இந்த விவகாரத்தில் இருந்து ராணுவம் தள்ளி நிற்க வேண்டும் என்று நாங்கள் எடுத்த நடவடிக்கையின் தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பினோம்.
ஆனால், அவர்கள் நல்ல ஆலோசனையை எடுத்துக் கொள்ளவில்லை. மே 10ஆம் தேதி காலையில் அவர்கள் மோசமாகத் தாக்கப்பட்டவுடன் எவ்வளவு சேதத்தை நாங்கள் ஏற்படுத்தினோம் என்பதையும், அவர்கள் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தினார்கள் என்பதையும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் நாங்கள் காண்பித்தோம். இதன் மூலம் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த யார் விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது” என்று கூறினார்.
இதையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது குறித்து அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் நம்பகத்தன்மையுடனும் மீளமுடியாத வகையிலும் நிறுத்தப்படும் வரை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.