பாஜக தலைவர் மனோஜ் நகேசியா சுட்டுக்கொலை!
பாஜக தலைவரும், முன்னாள் மாவோயிஸ்டு தலைவருமான மனோஜ் நகேசியா துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்தேகா மாவட்டத்தில் உள்ளது லச்ராகெட் கிராமம். இங்கு வசித்துவந்த பாஜக தலைவர் மனோஜ் நகேசியா நேற்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை உணவு அருந்திக்கொண்டிருந்த இவரை, மர்ம நபர்கள் சுட்டுவிட்டு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மாவோயிஸ்டுகளின் தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அமைப்பில் இருந்து பிரிந்துவந்த இவர், 2014ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதே ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியும் அடைந்தார். இவரது கொலையில் தொடர்புடைவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே மாநிலத்தில் கும்லா மாவட்டத்தில் மேலும் இருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரே நாளில் மூவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டும், இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.