
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் நேற்றுடன் (13.05.2025) நிறைவடைந்தது. இதனையடுத்து அவர் ஒய்வு பெற்றார். இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி பி.ஆர். கவாயை தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா முறைப்படி கடந்த மாதம் முன்மொழிந்தார். இந்த நியமன நடைமுறையின் ஒரு பகுதியாக இது தொடர்பான பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி, உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று (14.05.2025) பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நீதிபதி கவாய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பி.ஆர்.கவாய் தலைமை நீதிபதியாக பதவியேற்ற அதே வேளையில், ஓய்வுப் பெற்ற சஞ்சீவ் கண்ணாவுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு சஞ்சீவ் கண்ணா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் நான் ஏற்க மாட்டேன். ஒருவேளை சட்டத்துறையில் ஏதேனும் ஒரு பணியில் இருக்கக் கூடும். நான் மூன்றாவது இன்னிங்ஸை மேற்கொள்வேன், சட்டம் தொடர்பான ஏதாவது செய்வேன்” என்று கூறினார்.