
பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியர்கள் இருவர் மது குடித்துக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் ஃபயாஸ்நகர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக அரவிந்த் குமார் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
அரவிந்த் குமார் மற்றும் சுதாரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மற்றொரு தலைமை ஆசிரியர் அனுபால் ஆகியோர் தினமும் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் முன்னிலையிலேயே மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த விவகாரம் கிராம பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக ஆசிரியர்கள் இருவரும் பள்ளி வகுப்பறையிலேயே மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை கிராம மக்கள், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அந்த வீடியோவை மாவட்ட நீதிபதியிடம் சமர்பித்து புகார் அளித்தனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் உள்ள ஒரு மேஜையில் இரண்டு தலைமை ஆசிரியர்களும் மதுவை ஊற்றி அருந்துகின்றனர்.
கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வட்டார கல்வி அதிகாரி விசாரணை நடத்தி மாவட்ட நீதிபதியிடம் அறிக்கையை சமர்பித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட நீதிபதி நிதி குப்தா வட்ஸ் இரு ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.