'One Crore to the bereaved farmer's family'-Punjab Govt

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், இன்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி படுகாயமடைந்தார். அவரை சக விவசாயிகள் மருத்துவமனைக்கு தூக்கி சென்று பாட்டியாவிலுள்ள ராஜிந்திரா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், நடப்பாண்டில் விவசாயப் போராட்டக் களத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Advertisment

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில அரசு சார்பில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் பகவன் சிங், உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.