பனாரஸ் பல்கலை. தாக்குதல் - நடந்தது என்ன?
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவிகள் ஒன்றுகூடி பல்கலை. நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர்களின் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தியது. இதை அரசியல் உள்நோக்கம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்மையில், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?

கடந்த வியாழன் இரவு பனாரஸ் பல்கலை. வளாகத்தில் விடுதிக்கு சென்றுகொண்டிருந்த கலைப்பிரிவு மாணவி ஒருவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதைத்தடுக்க அந்த மாணவி கூச்சலிட்டதில், அவர்கள் அந்த இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தபோது கல்லூரி பாதுகாவலர்கள் மிக அருகில் இருந்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து விடுதி கண்காணிப்பாளரிடம் அந்த மாணவி புகாரளித்தபோது, ‘நீ எதற்காக தாமதமாக விடுதிக்கு வந்தாய்?’ என கேள்வியெழுப்பியுள்ளார். இதையடுத்து சக மாணவிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததை அடுத்து, பலமுறை பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இது தெரிந்தும் பல்கலை. நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, இதைக் கண்டுகொள்ளாத பல்கலை. நிர்வாகத்தைக் கண்டிக்கும் விதமாக மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தரின் வீட்டை முற்றுகையிட முயன்றபோது, காவல்துறையினர் தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பல மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இன்னமும் பல்கலைக்கழகத்தில் இயல்புநிலை திரும்பாத நிலையில், 28ஆம் தேதி முதல் அறிவிக்கப்படும் தசரா விடுமுறை மூன்றுநாட்கள் முன்கூட்டியே இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்