பனாரஸ் பல்கலை. தாக்குதல் - பாஜகவை விமர்சிக்கும் ராகுல்காந்தி!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புகழ்பெற்ற பணாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகளின் மீது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைக் கண்டுகொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல்கலைக்கழக துணைவேந்தரின் வீட்டையும் முற்றுகையிட மாணவிகள் முயன்றதால், காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பல மாணவிகள் மற்றும் செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, இதுதான் பாஜகவின் ‘மகளைக் காப்பாற்று, மகளைப் படிக்கை வை’ (Beti Bachao, Beti Padhao) திட்டம் என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். உபி மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வாரனாசிக்கு இரண்டு நாள் பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி கிளம்பிய ஓரிரு மணிநேரங்களில் இந்த போராட்டமானது வலுத்தது. எனவே, இந்தப் போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்