3 வயது குழந்தை, நூறு கோடி சொத்தினை விட்டுவிட்டு துறவிகளான தம்பதி!
பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே மேற்கொள்ளும் துறவு வாழ்க்கையை, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தம்பதி மேற்கொண்டிருப்பது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சுமித் (35), இவரது மனைவி அனாமிகா (34). இவர்கள் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 23ஆம் தேதி ஜைன சமய குரு ஒருவரின் முன்னிலையில் துறவு வாழ்க்கை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும், இவர்கள் ரூ.100 கோடிக்கும் மேலான சொத்துக்களையும், தங்களது 3 வயது குழந்தை இப்யாவையும் விட்டுவிட்டு செல்வதாக முடிவெடுத்துள்ளனர். இனி தங்களது குழந்தை இப்யாவை, தாத்தா பாட்டியிடம் விட்டுச்செல்வதாகவும், அவர்கள் இப்யாவைக் கவனித்துக்கொள்வார்கள் எனவும் இந்தத் தம்பதியினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனாலும், நீமுச் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரின் கண்டனங்களை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மைனர் குழந்தை இப்யாவை தனியாக விட்டுச்செல்வது தவறு என அதில் குறிப்பிட்டிருந்தும், அவர்கள் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்துவிட்டு துறவு வாழ்க்கைக்காக சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.