Skip to main content

திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது!

Published on 12/10/2017 | Edited on 12/10/2017



1949 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் நாள் திருவண்ணாமலை வந்திருந்த அன்றைய இந்திய கவர்னர் ஜெனரலான ராஜாஜியை, தந்தை பெரியார் மணியம்மையுடன் சென்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு சென்னை நாளிதழ்களில் செய்தியாக வெளியானது. இந்தச் சந்திப்பு விவரம் குறித்து அந்த பத்திரிகைகள் எதுவும் எழுதவில்லை. எனவே இது கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலவிதமான தகவல்கள் பரவினாலும் பெரியார் எதுவும் விளக்கம் அளிக்கவே இல்லை. கட்சிக்குள் இது மனக்கசப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களில் கோயம்புத்தூரில் முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. இதில் தந்தை பெரியாரும், அண்ணா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றார்கள்.





கூட்டத்தில் பேசிய அண்ணா ராஜாஜியுடன் பெரியார் சந்திப்பு விவரத்தை வெளியிட வேண்டும் என்று பகிரங்கமாகவே கேட்டார். ஆனால், பெரியார் பேசும்போது, அந்தச் சந்திப்பு தனது சொந்த விஷயம் என்றும் கட்சிக்கும் அந்தச் சந்திப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார். பெரியார் இப்படிப் பேசியது கூட்டத்தினரை அதிரச்சியடையச் செய்தது,

அதன்பிறகும் பெரியாரின் போக்கு கட்சிக்குள் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து, தனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்துவது தொடர்பாகவே ராஜாஜியிடம் பேசியதாக விடுதலையில் விளக்கம் அளித்தார்.

அது நீண்ட பெரிய அறிக்கையாக இருந்தது. தனது மனதுக்கு எது சரியெனப் பட்டதோ அதையே மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் இதுவரை செய்து வந்திருப்பதாகவும், தனது முடிவு சரிதான் என்று பின்னாளில் அனைவரும் ஏற்கும்படியே இதுவரை தனது முடிவுகள் இருந்திருக்கின்றன என்றும் பலவாறு அவர் வாதங்களை முன்வைத்திருந்தார்.

முதலில் எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்வதற்காக, நான் ஐந்தாறு ஆண்டுகளாக பழகி நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும் இயக்க நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும் கொண்டு நடந்து வந்திருக்கிற மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக்கொண்டு, வேறு நான்கு அல்லது ஐந்து பேரை சேர்த்து ஒரு ட்ரஸ்ட் அமைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று தந்தை பெரியார் அறிக்கையில் கூறியிருந்தார்.

தனது கடமையை உணர்ந்து, தனது மனச்சாட்சி மீது நம்பிக்கை வைத்து, மிகுந்த யோசனை செய்து நல்ல எண்ணத்துடன் இதைச் செய்யப் போவதாகவும், தனது நல்லெண்ணத்தையும் நற்பலனையும் மக்கள் விரைவில் உணருவார்கள் என்றும் பெரியார் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

பெரியாரின் இந்த அறிக்கை கட்சிக்குள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவாதத்தை உருவாக்கியது. பெரியார் செய்தால் சரியாக இருக்கும் என்று ஒரு சாராரும், பொதுமக்கள் மத்தியில் இது கட்சிக்கும் பெரியாருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று ஒரு சாராரும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில்தான் 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி மணியம்மையை திருமணம் செய்துகொள்ளப் போவதாக சென்னை ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் மனுப்போடப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பெரியார் தனது முடிவைக் கைவிட வேண்டும் என்று கடிதங்கள் தந்திகள், டிரங்கால்கள் மூலம் வேண்டுகோள் விடப்பட்டன. விடுதலை அலுவலகப் பொறுப்பை வகித்த பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வெ.கி.சம்பத் முதலில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பலரும் விலகினார்கள். அண்ணாவைச் சந்திக்க சம்பத் விரும்பினார். காஞ்சிபுரத்தில் இருந்த அண்ணாவை அழைத்துக்கொண்டு சென்னை வந்தார்கள்.

பெரியாரின் திருமண விவகாரம் கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் பேசு பொருளாகியது. 72 வயது பெரியார் 26 வயது மணியம்மையை திருமணம் செய்து கொள்ளப் போவதை பொருந்தாத் திருமணம் என்று ஒரு சாரார் கேலி பேசினார்கள். வயதான காலத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள ஒரு துணையை ஏற்பாடு செய்து கொள்வது தவறல்ல என்று இன்னொரு சாராரும் பேசினார்கள்.

பெரியாருக்கென வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அவருடைய குறிப்பறிந்து செயல்படவும் இந்தத் திருமணம் சரிதான் என்று பெரியாரை ஆதரிப்போர் வாதிட்டார்கள்.

பகுத்தறிவு, பொருந்தாத் திருமணம் ஆகியவற்றை கடுமையாக எதிர்த்தும் விமர்சனம் செய்தும் கண்டித்தும் பேசிய பெரியாரே பொருந்தாத் திருமணம் செய்யலாமா என்று எதிரணியினரும் பேசினார்கள்.



சம்பத் - அண்ணா


உள்கட்சி மோதல் பலமாகிக் கொண்டே போனது. பெரியாரின் திருமணத்தை தடுத்து நிறுத்த முக்கிய பிரமுகர்கள் தூது போனார்கள். ஆனால் யாருடைய பேச்சையும் பெரியார் கேட்க விரும்பவில்லை. இதையடுத்து பெரியாரின் திருமண ஏற்பாடும் அவருடைய அறிக்கையும் கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ள எதிர்விளைவுகளை விளக்கி அண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் நாள் பெரியார் மணியம்மை திருமணம் நடந்து முடிந்தது.

அதன்பிறகு கட்சிப் பணிகள் இரண்டு மாதங்கள் ஸ்தம்பித்துவிட்டன. இதுகுறித்து பெரியார் எதுவும் பேசவில்லை. எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தார். நிதியை மோசடி செய்ததாகவும், தம்மை கொலைசெய்ய முயன்றதாகவும், தலைமைப் பதவியைக் கைப்பற்ற முயன்றதாகவும் அண்ணா, சம்பத் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் மீது பெரியார் குற்றம் சாட்டினார்.

அவற்றுக்கெல்லாம் பொறுமையாகவே அண்ணா பதில் சொன்னார். பெரியாரை யாரும் விமரிசிக்க வேண்டாம் என்றும், எதிரிகளுக்கு வாய்ப்பளித்துவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கொலை செய்ய முயன்றதாக பெரியார் எழுதியதை எதிர்த்து அண்ணாவும் சம்பத்தும் வழக்குத் தொடர்ந்தனர். அதையடுத்து அவர்களை குறித்து அப்படி சொல்லவில்லை என்று பெரியார் விளக்கம் அளித்தார்.

திராவிடர் கழகம் என்ற பெயரிலேயே எதிர்ப்பாளர்களும் செயல்பட்டனர். கட்சியைக் கைப்பற்றும் முயற்சியை விரும்பாத அண்ணா புதிய இயக்கம் தொடங்குவது தொடர்பாக தோழர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் முடிவில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடக்கவிழா 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.





மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். மழை கொட்டியது. கொட்டும் மழையில் அறிஞர் அண்ணா பேசியதில் இன்றைக்கும் அவசியமான சில பகுதிகளை அறிந்து கொள்வது நல்லது…

“…கோவையிலே பெரியார் பேசும்போது ஏதோ தீவிரத் திட்டத்தில் இறங்கப்போவதாகவும் தன்னைத்தானே முதலில் பலியாக்கிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். நான்கூட பயந்தே போனேன். ஆனால், திருச்சியிலே பேசிய பெரியார் நான் இன்னும் 10 ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறேன் என்றும் அதற்காகத்தான் திருமணம் செய்துகொண்டதாகவும் பேசியிருக்கிறார். அவர் நன்றாக வாழட்டும். 10 ஆண்டுகள் அல்ல, 125 வயதுவரை வாழட்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணிகளைப் பார்க்கட்டும். அவருடைய கொள்கைகளும் திட்டங்களும் நம்மால் நிறைவேற்றப்படுவதை கண்டு களிக்கட்டும். தவறு என்றால் திருத்தட்டும். போகும் பாதை தவறு என்றால் சுட்டிக்காட்டட்டும். ஆனால் வேலை செய்வதைத் தடுக்க வேண்டாம். பகையுணர்ச்சியை வளர்க்க வேண்டாம்…

…திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலும் இருந்து வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து வைதீகக்காட்டை அழித்து சமதர்மப் பூங்காவாக திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். இதில் எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் புஷ்பங்களும் காய்களும் கனிகளும் திராவிடத்தின் எழுச்சியையும் மலர்ச்சியையும்தான் குறிக்கும்…

…கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியை அடியோடு விட்டொழிக்க வேண்டும்…” என்று முழங்கினார் அண்ணா.

திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் உதயமாகிவிட்டது. கொட்டும் மழையில் கூட்டம் கேட்க வந்தவர்கள் அண்ணாவின் உரை கேட்டு மனம் கலங்கினார்கள். புதிய நம்பிக்கையையும் பெற்றனர்.

(திமுக உதயமான சமயத்தில் கலைஞரின் பங்களிப்பு பற்றி திங்கள் கிழமை பார்க்கலாம்…)

-ஆதனூர் சோழன்

முந்தைய பகுதிகள் :



சார்ந்த செய்திகள்