
ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்ததாக கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இருந்து 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' கோவை நோக்கி இன்று மாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கோவை ஆவரம்பாளையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்த பொழுது கல்லூரி மாணவர்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தின் மீது கற்களை வைத்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் ஐந்து பேரும் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தது தெரிந்தது. எதற்காக தண்டவாளத்தில் கற்கள் வைத்தார்கள்; ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் தண்டவாளத்தில் கற்களை வைப்பதை லோகோ பைலட் பார்த்துவிட்டு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.