Vadakadu incident; 12 people undergoing treatment at the hospital arrested!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு கடைவீதியில் இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு நடந்து முடிந்த நிலையில் ஒரு தரப்பு இளைஞர்கள் மற்றொரு தரப்பினர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பெரும் மோதல் உருவானது. இதில் ஒரு தரப்பிலும் பெண்கள் உள்பட இருதரப்பிலும் 17 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இதில் ஆள் இல்லாத வீட்டில் 3 பைக்குகள் எரிக்கப்பட்டது. மேலும் சில வீடுகள், பைக்குகள், அரசு பேருந்து கண்ணாடிகள், ரோந்து போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலும் மற்றொரு தரப்பில் ஒருவர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இரு தரப்பில் இருந்து மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை இரவு புதுக்கோட்டை மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இரு தரப்பினரில் ஒரு தரப்பில் மதன், செல்வக்குமார், சதீஷ்குமார், சந்தோஷ், கலைவேந்தன், கோவிந்தராசு, சதீஷ் ஆகிய 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மருத்துவமனையிலேயே புதுக்கோட்டை நீதிபதி பாபுலால் முன்பு ஆஜர்படுத்தினர்.

இந்த 7 பேருக்கு எதிர்வரும் 21 ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதே போல மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மற்றொரு தரப்பைச் சேர்ந்த தீபன், தினேஷ், கோகுலகிருஷ்ணன், மாதவன், மனோஜ் ஆகிய 5 பேர்களை அறந்தாங்கி நீதிபதி சத்தியநாராயணன் முன்பு ஆஜர்படுத்தினர். இவர்களுக்கும் 21 ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிகிச்சையில் உள்ள கைது செய்யப்பட்ட 12 பேருக்கும் போலீசார் காவல் போடப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் இதுவரை ஒரு தரப்பில் 20 பேரும், மற்றொரு தரப்பில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது நடவடிக்கைகள் தொடரலாம் என்கின்றனர்.

Advertisment