Skip to main content

சிங்கத்துக்கும் புலிக்கும் காதல் வந்தால்...

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
சிங்கத்துக்கும் புலிக்கும் காதல் வந்தால்...

செல்ல நாய் வளர்ப்பவர்கள் பலர், அதற்கென வாட்ஸ்-அப் குழுவெல்லாம் அமைத்து தகவல்களைப் பரிமாறி பராமரிக்கின்றனர். சில வகை நாய்களைப் பராமரிக்கும் செலவு, நம்மைப் பராமரிக்கும் செலவை விட அதிகம். நாய்கள் இனப்பெருக்கத்துக்கிற்காக தேடித் தேடி கவனமாக  ஏற்பாடு செய்வார்கள். 'கிராஸ் பிரீட்' எனப்படும் கலப்பின இனப்பெருக்கமும் உண்டு. கலப்பின நாய்கள், மாடுகள், ஆடுகளை நாம் பார்க்கிறோம்.  இதெல்லாம் சலித்துப் போய் வெளிநாட்டு விஞ்ஞானிகள் கலப்பின புலி, சிங்கம் என சென்றுவிட்டனர்.  கலப்பின ஆராய்ச்சி  முயற்சியால் விளைந்த சில வினோத விலங்குகள் இங்கே ...

லிகெர் (liger)


ஆண் சிங்கம் மற்றும் பெண் புலியின் கலப்பினமே லிகெர். பூனை இனங்களிலேயே இதுதான் பெரியது. 'ஹெர்குலஸ்' (hercules) என்ற லிகெர் தான் தற்சமயம்  உலகின்  மிகப்  பெரிய லிகெர் ஆகும். 430 கிலோ எடையுள்ள  இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் வாழும் இதன் தந்தை ஒரு ஆப்பிரிக்க சிங்கம், தாய் வங்காளப் புலி. இருவருக்கும் ஏற்பட்ட காதல் தற்செயலானது என்றும் 'ஹெர்குலஸ்' பிறந்தது ஒரு விபத்து என்றும் கூறுகின்றனர். எது எப்படியோ,  'ஹெர்குலஸ்' மிக ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழும் என விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பல்வேறு நாடுகளில் நடக்கும் விலங்குக் காட்சிகளிலும் விழாக்களிலும் கலந்து கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாகத் திகழ்கிறது ஹெர்குலஸ். 

டிகோன்(tigon) 




லிகெரின் உல்டா தான் இந்த டிகோன்.  ஆண் புலி மற்றும் பெண் சிங்கத்தின் கலப்பினம் இது. புலியைப்  போன்றே டிகோன் இருக்கும். இந்தியாவில் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மிருகக்காட்சிசாலையில் 1971இல் ஒரு டிகோன் பிறந்தது. அதே தாய் சிங்கத்துக்கு மொத்தம் ஏழு டிகோன்கள் பிறந்தன. உருவத்தில் லிகெர்கள் அளவுக்கு பெரியவை அல்ல டிகோன்கள். 

ஜாக்லியன் (jaglion)



ஆண் ஜாக்குவார் (சிறுத்தை வகை)  மற்றும்  பெண் சிங்கத்தின் கலப்பினமே ஜாக்லியன். 2006இல் கனடாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இரண்டு ஜாக்லியன்கள்  பிறந்தன. இவை  சிறுத்தை வகை  போலவே தோற்றமளிக்கும்.

ஜான்கி (zonkey)




ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினமே இந்த ஜான்கி. 2000 ஆண்டில் உருவாக்கப்பட்ட இதன்  முகம் வரிக்குதிரை போன்றும், உடல் கழுதை  போலவும் இருக்கும் இதற்கு உடலில் வரிக்குதிரை போன்ற கோடுகளும் உள்ளன. உலகின் பல மிருகக்காட்சி சாலைகளிலும்  ஆப்பிரிக்கக் காடுகளிலும் காணப்படும் ஜான்கிகள் மனிதர்களோடு சரிவர பழகாத சைவ விலங்குகள். 

ஹோல்பின் (wholephin)




மிக அரிதான கலப்பினம் இந்த  ஹோல்பின். 'பால்ஸ் கில்லர் வேல்'(false killer whale) எனப்படும் திமிங்கல வகை   மற்றும் 'பாட்டில்நோஸ் ' டால்பின் (bottlenose dolphin) வகை  ஆகியவற்றின் கலப்பு ஆகும். 1985இல் ஹவாய் தீவில் உள்ள ஒரு கடல்வாழ் உயிரின கண்காட்சியகத்தில் பிறந்த 'கெக்காய்மாலு' என்ற  ஹோல்பின் தான் அந்த வகையில்  உலகின் முதல் ஆரோக்கியமான உயிரினமாகும்.

கலப்பின விலங்குகளில்  பெரும்பாலானவை ஆராய்ச்சிக்காகவும், சில, விபத்தாகவும் உருவானவை. இயற்கையைக் கட்டுப்படுத்தவும், மாற்றியமைக்கவும் தொடர்ந்து மனித அறிவு முயல்வதும், 'நான் உங்களுக்கு கட்டுப்பட்டவனில்லை' என்று இயற்கை மனித அறிவுக்கு அவ்வப்போது உணர்த்துவதும் நிகழ்கிறது.  

கமல்குமார்  

சார்ந்த செய்திகள்