
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன், கீதா ஜீவன், காந்தி, செங்குட்டுவன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், புதுச்சேரியில் கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கரோனா உறுதியானது. இவர் கடந்த மூன்று நாட்களாக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.