ஜப்பானில் திடீர் தேர்தல் நடத்த பிரதமர் அபே முடிவு!
ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ் சபையை செப்டம்பர் 28 ஆம் தேதி கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்தார்.
ஜப்பானில் சமூக நலத்திட்டங்களுக்காகவும் கல்விக்காகவும் வரிகளை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறேன். வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் குறித்து கடுமையான நிலைப்பாடு எடுக்க விரும்புகிறேன். இவற்றுக்கு மக்களிடம் அனுமதி கேட்பதற்காகவே இந்தத் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
ஆளுங்கட்சியின் சிறிய கூட்டணிக் கட்சியின் தலைவர் நட்சுவோ யமகுச்சி, நாடாளுமன்றத் தேர்தல் அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவதாக கூறினார். பிரதமர் அபேயின் செல்வாக்கு கடந்த ஜூலை மாதம் 30 சதவீதமாக இருந்தது. அது தற்போது 50 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது.
எனவே இதைப் பயன்படுத்தி மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
இந்நிலையில் டோக்கியோ நகரின் பெண் ஆளுநர் கொய்கே நம்பிக்கை கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக கூறினார். அவருடைய கட்சியில் சேர்ந்து போட்டியிடப் போவதாக ஆளும் கட்சியின் அமைச்சர் புகுடா தெரிவித்துள்ளார்.
- ஆதனூர் சோழன்