Skip to main content

பெகாசஸ் விவகாரம்: என்.எஸ்.ஓ நிறுவனத்தில் சோதனை... கணினிகளை தோண்டி துருவிய இஸ்ரேலிய அதிகாரிகள்!

 

nso group

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்தப் பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வுசெய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரும் சர்ச்சையானது.

 

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேநேரத்தில் இந்த ஊடக செய்திகள், இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் முயற்சி எனவும், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறிவருகிறது. இதற்கிடையே பிரான்ஸ் நாட்டின் பத்திரிகையாளர்களைப் பெகாசஸ் மூலம் மொராக்கோ உளவுத்துறை உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக மீடியாபார்ட் என்ற ஊடகம் புகாரளித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ், பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணையைத் துவக்கியுள்ளது. மேலும், சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டிடம் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க அழுத்தம் கொடுத்தார். இதன்பிறகு பிரான்ஸ் சென்ற இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர், பெகாசஸை தயாரித்து விற்பனை செய்யும் என்.எஸ்.ஓ குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முதற்கட்ட தகவல்களை பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் பகிர்ந்துகொண்டதோடு, பெகாசஸ் விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், நேற்று (28.07.2021) பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இஸ்ரேலிய அதிகாரிகள், என்.எஸ்.ஓ அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதனை அந்த நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் சோதனை தொடர்பான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில் இந்தச் சோதனையின்போது, என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் கணினிகளும் ஆவணங்களும் ஆழமாக தோண்டித் துருவப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் கூறியுள்ளன.