பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!
நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஊழியர்களின் ஓய்வு அறை இன்று அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் என 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசின் மெத்தனப்போக்கால்தான் பழுதான கட்டிடம் இடிந்து விழுந்து சக ஊழியர்கள் பலியானார்கள் என்று கூறுகின்றனர் ஊழியர்கள்.

பொறையாறு துயரச்சம்பவத்திற்கு காரணமான அரசு மற்றும் நிர்வாகத்தை கண்டித்து புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நுழைவாயிலில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரனம் வழங்குவதுடன் அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் கறம்பக்குடி, பட்டுக்கோட்டை பேருந்து நிலையங்கள் எப்ப இடிந்து விழுந்து பயணிகளை பலி வாங்குமோ என்ற நிலையில் உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இது போன்ற சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோரிக்கை வைத்தனர்.
- இரா.பகத்சிங்