
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பாலாற்றின் குறுக்கே ரூபாய் 26 கோடி திட்ட மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. இதற்காக பாலாற்றில் பள்ளம் தோண்டிய போது எடுக்கப்பட்ட மணல் மலைபோல் ஆற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மணல் கொள்ளையர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் இணைந்து இரவு நேரங்களில் மணல் கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு எச்சரித்தனர்.

இருப்பினும் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாலும், முறைகேடாக பாலாற்றில் இருந்து மணலை திருடி பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டதால், அம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்து ஒப்பந்ததாரர் வேலுச்சாமி மீது உரிய விசாரணை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த அம்பலூர் உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவரை தற்காலிக பணியிட நீக்கம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவிட்டுள்ளார்.