
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. (நிறுவன) தலைவர் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது இன்று (16.05.2025) காலை 10:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியினுடைய அமைப்பு ரீதியிலான 108 மாவட்டச் செயலாளர்கள், 108 மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டன. அதில் அனைவரும் கட்டாயம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த கூட்டத்தை பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி புறக்கணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த கூட்டமானது ராமதாஸால் மட்டுமே முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அதனை அன்புமணி புறக்கணிக்க முடிவு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தைலாபுரத்திற்கு 8 மாவட்ட செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே வருகை தந்தனர். அந்த வகையில் சேலம் மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள அருள் கலந்து கொண்டார். அதேபோன்று தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள ம.க. ஸ்டாலின் உள்ளிட்ட 8 மாவட்ட செயலாளர்களும், 7ஏழு மாவட்ட தலைவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கலந்து கொண்டார். மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இத்தகைய சூழலில் தான் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அதில், “பொறுப்பாளர்கள், தலைவர்கள், இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பசுமை தாயகம் எனத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கூட்டங்கள் நடத்தப் போகிறோம். இது முதல் கூட்டம். இந்த கூட்டத்தில் பா.ம.க.வினுடைய பொறுப்பாளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு கால கட்டங்களிலே, பல்வேறு சோதனைகளை, வேதனைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் கட்சியினுடைய வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். எனவே 50 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வகையிலே அவர்களுக்கு நான் ஆலோசனை சொல்ல, அவர்களது ஆலோசனையை நான் கேட்க, நாம் ஆள வேண்டும். நாம் ஆண்டால் தான் தமிழ்நாட்டு மக்கள் நலமோடும், மகிழ்வோடும், வறுமை இல்லாமல் வாழ்வார்கள். சமூக நீதியோடு வாழ்வார்கள் என்ற நோக்கில் தான் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
அந்த வகையிலே ஒரு மிகப் பிரம்மாண்டமான மாநாட்டை 10 லட்சம் மக்கள் கூடிய மாநாட்டை ஊடகங்கள் வாயிலாகப் பார்த்திருப்பீர்கள். அதற்கு அடுத்த கட்டமாக இன்றைக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதனுடைய தொடர்ச்சியாக பா.ம.க.வினர் எப்படி வேலை செய்ய வேண்டும்?, எப்படி பணியாற்ற வேண்டும்?, 50 தொகுதிகளிலே படுத்துக்கொண்டே ஜெயிப்போம். படுத்துக் கொண்டே ஜெயிக்கிறது எப்படி என்று எனக்குத் தெரிந்த வித்தையை அவர்களுக்குத் தெரியச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். படுத்துக்கொண்டே ஜெயிப்பது என்று சொன்னால் 50 தொகுதிகளில் ஒரு மாதத்தில் தேர்தல் வைத்தாலும் குறைந்து 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு இவர்களுக்கு அறிவுரை சொல்ல அவர்கள் சொல்லுகின்ற யோசனையை நான் கேட்க இருவரும் 50 தொகுதி வெற்றி பெறுவது எப்படி?, எப்படி உழைப்பது? என்பதைப் பற்றி யோசனைகளைப் பரிமாறிக் கொள்வதற்காக இந்த கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.

இந்த கூட்டத்திலே அவர்களுடைய கருத்துக்களை நானும் கேட்பேன். நானும் சில கருத்துக்களைச் சொல்வேன். கௌரவ தலைவர் ஜி.கே. மணி, சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் வந்துள்ளனர். செயல் தலைவர் வரலாம். அல்லது வந்து கொண்டிருக்கலாம். அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வன்னியர் சங்க மாநாடு நடந்த போது பாராட்டுகையில் திருக்கத்தூர் ஆறுமுகத்தோடு, செயல் தலைவர் அன்புமணி என்று அவரது பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னேன். பா.ம.க.வில் கோஷ்டி என்பதே கிடையாது” எனப் பேசினார்.