
சென்னை மாநகர பேருந்தில் ஏறிய முதியவரைப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிய சென்னை மாநகர அரசு பேருந்து வண்டலூர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மற்றும் சுமார் 6 பயணிகள் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் முதியவர் ஒருவர் இந்த பேருந்தில் ஏறியுள்ளார். அதன் பின்னர் அவர் வலதுபுறம் முதல் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். அந்த இருக்கைக்கு மேற்புறம், ‘மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் இருக்கை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் அங்கு வந்த நடத்துநர், முதியவரை நோக்கி, “இங்கே உட்காரக்கூடாது அந்தப்பக்கம் செல்லுங்கள்” என ஒருமையில் கடுமையான வார்த்தையில் கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதியவரைப் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு நடத்துநரும், ஓட்டுநரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். முதியவரை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் தாக்கும் வீடியோ காட்சி சமுக வலைத்தளத்தில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.