
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டை பழைய ரேசன் கடைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(55). இவரது மனைவி பாரதி(45). இந்த தம்பதியர்களுக்கு புவனேஸ்வரி(23), ராஜேஸ்வரி(21) என்ற 2 மகள்கள் உள்ளனர். ராஜேந்திரன் சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதையடுத்து முத்த மகள் புவனேஸ்வரியை சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

பாலுக்கு 4 வயதில் சாஸ்மிதா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் பாலுவின் உறவினரான ஓசூரில் வேலை செய்து வரும் கொடைக்கல் புதுகுடியனூரை சேர்ந்த விஜய் (26) என்பவருடன் புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவி இடையிலான கருத்து வேறுபாட்டால் கடந்த 2 வருடங்களாக கணவரை பிரிந்து கீழ் புதுப்பேட்டையில் உள்ள அவருடைய தாயார் பாரதியுடன் புவனேஸ்வரி வசித்து வந்தவர், கடந்த 5 மாதங்களாக ஆண்நண்பர் விஜய்யுடன் வசித்து வந்துள்ளார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த கணவர் பாலு, மே 14 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தனது மாமியார் பாரதியின் வீட்டுற்கு சென்று மனைவி தன்னை விட்டு பிரிந்து தாய்வீட்டிலேயே வசித்து வருவது தொடர்பாக கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மருமகன் பாலு வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தனது மாமியார் பாரதியை வெட்ட முயன்ற போது மாமியார் தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் பாலு துரத்திச் சென்று மாமியாரை உடம்பில் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். இதில் மாமியார் பாரதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அங்கிருந்து அப்படியே தனது உறவுக்காரனான விஜய் கொடைக்கல் புது குடியானூர் பகுதிக்கு சென்று விஜய்யை தேடியபோது அவன் இல்லாததால் ஆத்திரத்தில் விஜய்யின் தந்தை அண்ணாமலை (60) மற்றும் தாயார் புவனேஸ்வரி (55) ஆகியோரை அங்கிருந்த இரும்பு கம்பியால் பலமாக தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்துள்ளனர். கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரண்டராகி தகவல் கூறியுள்ளார் பாலு. அதன்பின் வாலாஜாபேட்டையில் வெட்டி கொலை செய்த மாமியார் மற்றும் சோளிங்கர் கொடைக்கல் , புது குடியானூர் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவரின் அம்மா அப்பா ஆகிய இருவர் என மூவரின் சடலங்களை மீட்ட போலீசார் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனைவியின் திருமணத்தை மீறிய உறவின் காரணமாக ஒரே இரவில் கணவர் மூன்று பேரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.