ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி அருகே உள்ளது தூக்கநாயக்கன்பாளையம் யூனியன். இந்த தூக்கநாயக்கன்பாளையம் யூனியனில் மொத்தம் 10 கவுன்சிலர்கள். இதில் திமுக 7 அதிமுக 3 இந்த நிலையில் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மறைமுக தேர்தலில் தொடக்கத்தில் அதிமுக கவுன்சிலர் நடராஜ் என்பவர் அப்போது திமுகவினரை தாக்கி வாக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார். இதனால் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாம் முறை தேர்தலில் முறையாக நடக்காது என்பதால் திமுகவினர் புறக்கணித்தனர்.

மூன்றாவது முறை நேற்றுமுன்தினம் மறைமுக தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் ஆசீர்வாதம் என்பவரும், அதிமுக சார்பில் விஜயலட்சுமி என்பவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். தேர்தல் முடிந்து தேர்தல் அலுவலர் பொன்னம்பலம் முடிவை அறிவிக்கும் போது அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமி 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தார். இது திமுகவினரை கொந்தளிக்க வைத்தது 7 கவுன்சிலர்கள் இருந்தும் வெறும் மூன்று கவுன்சிலர் இருக்கிற அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என சாலை மறியல் உட்பட பல போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் போலீசார் திமுகவினரை கைது செய்தனர். இதன்பிறகு அந்த பகுதிகளில் திமுகவினர் அமைச்சர் செங்கோட்டையன் அதிகார துஷ்பிரயோகம், அமைச்சர் செங்கோட்டையனின் அத்துமீறலில் அடிபணிந்த அதிகாரிகள் என போஸ்டர் ஒட்டினார்கள். இந்த போஸ்டர்களை இரவோடிரவாக முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி கிழித்துப் போட்டார். அதன் பிறகும் போஸ்டர் ஒட்டினார்கள் திமுகவினர்.

அப்போது அதிமுக கவுன்சிலர் நடராஜ் ஒவ்வொரு போஸ்டரையும் கிழித்துக்கொண்டிருக்க திமுகவினர் பதிலுக்கு போஸ்டரை கிழித்த நடராஜை விரட்டினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் நடராஜ் உட்பட முன்னாள் எம்எல்ஏ கந்தசாமிக்கும் அடி விழுந்துள்ளது. திமுகவினரும் தாக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுகவினரால் தாக்கப்பட்டதாக கூறி முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி கோவை மருத்துவமனையிலும், கவுன்சிலர் நடராஜ் கோபிசெட்டிபாளையம் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார்கள். போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது தற்போது அந்த பகுதியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.