வாக்கி டாக்கி, குட்கா ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் -அன்புமணி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியிலுள்ள மருத்துவர் ச.இராமதாசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மருத்துவர் இரா.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். விழாவில் 2011 முதல் 2016 ஆகிய நான்கு கல்வியாண்டுகளை சேர்ந்த 1429 மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் பட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, “ இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகாமாக உள்ளது. ஆனால் மழை நீரை சேமிக்க தவறி விட்டோம். மழை நீர் வீணாக கடலுக்கு சென்று கலக்கிறது. தி.மு.க, அதிமுக இந்த இரண்டு திராவிட கட்சிகளும் நீர் மேலாணமை திட்டங்களை செயல்படுத்தவில்லை. மாறாக மதுக்கடைகளை திறந்துவிட்டு சாராயத்தைதான் ஆறாக ஓடவிட்டுள்ளனர்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“ டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு தவறான தகவல்களை தெரிவிக்கிறது. மூடி மறைப்பதை விட்டு விட்டு தடுப்பு நடவடிக்கைகளைகளையும், சிகிச்சைகளையும் முறையாக செய்ய வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடைபெறுகிறது. இந்த மாவட்ட மக்களின் நீரை, நிலத்தை வாழ்வாதாரத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டு இம்மக்களை வஞ்சிக்கிறது. இங்கு கிடைக்கும் வருவாயை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தர வேண்டும்.
தமிழ்நாட்டில் மது விற்பனை மட்டுமே நடக்கிறது. ஆட்சியாளர்கள் அதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மத்திய பா.ஜ.கவும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது.
வாக்கி டாக்கி ஊழல் மற்றும் குட்கா ஊழல்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மைகள் வெளிவரும். அதற்காக பா.ம.க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.
-சுந்தரபாண்டியன்