
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினரைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (15.03.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருண் குமார் ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் வருண் குமார் தரப்பில் விளக்கமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், “நான் ஒரு பொறுப்பான அரசுப் பணியில் இருக்கக்கூடிய என்னைப் பற்றி அவதூறாகப் பேசி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் சீமான் இன்று ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி, “சீமான் ஏன் ஆஜராகவில்லை? கடந்த முறை, முறையாக ஆஜராகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாரே?. ஏன் இந்த முறை ஆகவில்லை?. இதுவே கடைசி வாய்ப்பாக இருக்க வேண்டும். அவர் தரப்பு விளக்கம் என்ன?. அவர் இன்று ஏன் வரவில்லை என்பதை உடனடியாக கேட்டுக் கூற வேண்டும். கடந்த முறையே நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகிறேன் என்று கூறிய பிறகு மீண்டும் ஆஜராகாமல் இருப்பது ஏன்?.
எதனால் அவர் ஆஜராகவில்லை என்ற விளக்கத்தை ஒரு மணி நேரத்தில் தர வேண்டும். இந்த தேதியைக் கேட்டதும் நீங்கள்தான்” எனத் தெரிவித்தார். அதன் பின்னர் சீமான் தரப்பு விளக்கமானது நீதிபதியிடம் அளிக்கப்பட்டது. அதில், “சீமானுக்கு அலுவல் பணிகள் இருக்கிறது. அதனால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு (21.05.2025) ஒத்திவைத்தது நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் இரு தரப்பும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.