Skip to main content

துருக்கி நாட்டை புறக்கணிக்கும் இந்தியர்கள்; பின்னணியில் பாகிஸ்தான்!

Published on 15/05/2025 | Edited on 15/05/2025

 

Indians boycotting Turkey for beyond pakistan support

துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கு இந்தியர்கள் புறக்கணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் உள்பட சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தன. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியா நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஆதரவு கொடுத்தன. இதில் துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு கொடுத்தன. சீனா மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றது. இதனால், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியது. இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளையும் இந்தியா முறியடித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் எழுந்தது. 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த துருக்கி, இந்தியாவிற்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு சோங்கர் வகை ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. துருக்கி வழங்கிய ட்ரோன்களைப் பயன்படுத்தி தான் இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றது. இந்த செய்தியை மத்திய அரசு தெரிவித்தப் பிறகு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் துருக்கியை இந்திய மக்கள் புறக்கணித்துள்ளனர். அதாவது துருக்கி, அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவிருந்த பயணங்களை எல்லாம் இந்தியர்கள் அதிரடியாக ரத்து செய்து வருவதாக ‘மேக் மை ட்ரிப் நிறுவனம்’ தெரிவித்துள்ளது. 

ஆன்லைன் பயண முன்பதிவு தளமான ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஒரு வாரத்தில் இந்திய பயணிகளிடம் இருந்து அஜர்பைஜான் மற்றும் துருக்கி சுற்றுலாப் பயணங்களுக்கான முன்பதிவுகள் 60 சதவீதம் குறைந்துள்ளன. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் பயணிக்க திட்டமிட்டு இருந்தவர்கள் ரத்து செய்யும் சதவீதம் 250 ஆக அதிகரித்துள்ளது. நமது தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நமது ஆயுதப்படைகள் மீதான மரியாதைக்காகவும் இந்தியர்கள் எடுத்த இந்த முடிவை, நாங்கள் வலுவாக ஆதரிக்கிறோம். அஜர்பைஜான் மற்றும் துருக்கிக்கு அனைத்து தேவையில்லாத பயணங்களை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு நாடுகளுக்கும், சுற்றுலாவை ஊக்கப்படுத்த எங்கள் தளத்தில் உள்ள அனைத்து விளம்பரங்களையும் சலுகைகளையும் நாங்கள் ஏற்கனவே நிறுத்திவிட்டோம்’ எனத் தெரிவித்தது. 

சார்ந்த செய்திகள்