Skip to main content

சென்னையில் நள்ளிரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அத்துமீறிய பரோட்டா மாஸ்டர்!

Published on 15/05/2025 | Edited on 15/05/2025

 

 young man misbehaved with a IT young girl who   in Chennai.

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள ஐ.டி.நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை(13.5.2025) நள்ளிரவு சுமார் 1 மணியளவில் பணி முடிந்து தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த லோகேஷவரன்(24) என்பவர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வந்து சென்றிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாததை உணர்ந்த லோகேஷ்வரன் இளம்பெண்ணின் வாயைப் பொத்தி மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லோகேஷ்வரன், அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறித்துடித்துள்ளார். அந்த சத்தம்கேட்டு அப்பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் ஓடி வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் லோகேஷ்வரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த துரைப்பாக்கம் போலீசார் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நேற்று அதிகாலை உணவகத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த லோகேஷ்வரனை கைது செய்தனர். 

பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், “நான் வேலை செய்யும் உணவகத்திற்கு அந்த இளம் பெண் சாப்பிட வருவார். அப்போது அவரது அழகில் மயங்கிய நான், எப்படியாவது அவரை அடைய வேண்டும் என்று நினைத்தேன். சம்பவத்தன்று உணவகத்திற்கு வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்தேன். அன்று இரவு மது அருந்திக் கொண்டிருந்தபோது, இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் அந்த பெண்ணின் ஞாபகம் வந்தது. அதனைத் தொடர்ந்து பழைய மாமல்லபுரம் சாலையில் அவர் தனியாக நடந்து சென்ற போது பின் தொடர்ந்து சென்றேன். பின்னர் அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதி வந்தது, அவரின் வாயை பொத்தி அருகில் உள்ள மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்ய முயன்றேன். ஆனால், அதற்குள் அவரின் அலறல் சத்தம்கேட்டு இளைஞர்கள் ஓடிவந்ததால் அங்கிருந்து நான் தப்பிச் சென்றேன்” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் லோகேஷ்வரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போலீஸ் விசாரணையின் போது லோகேஷ்வரன் கழிவறையில் வழுக்கிவிழுந்து கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு கையில் மாவுகட்டு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்