டெங்குவைக் கவனிக்காமல் உறங்கும் அரசு - சங்கு ஊதி பாமக-வினர் ஆர்ப்பாட்டம்!
டெங்கு காய்ச்சலுக்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பாமக-வினர் சங்கு ஊதி நூதனமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, பாமக மாநில துணை பொது செயலாளர் வெங்கடேசன், ‘தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அதைத்தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல்வறேு மருத்துவமனைகளில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற பொதுமக்கள் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டம் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகிறது.
தமிழகத்தில் பெருகிவரும் டெங்கு காய்ச்சலுக்கு முன்கூட்டியே நடவடிக்கையை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து டெங்குவைக் கட்டுபடுத்த இந்த அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கெள்ளவில்லை.
ஆகவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உறங்கிக்கொண்டு இருக்கும் தமிழக அரசையும் தர்மபுரி மாவட்ட நி்ர்வாகத்தையும் எழுப்பி விட சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
- வடிவேல்