
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்டத்தில் இந்தியா - மியான்மார் எல்லையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஆயுத கும்பலைச் சேர்ந்த ௧௦ பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 10 பேரிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு இரு சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது.
இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் எனப் பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்தது. இதற்கிடையே மணிப்பூர் மாநில முதல்வராக இருந்த பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதே சமயம் புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்வதற்கான அவகாசம் முடிந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. அதோடு ஆறு மாதங்களுக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்ற கெடுவும் முடிவடைந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.