
ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவர் அதே பகுதியில் உள்ள புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்துக் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இத்தகைய சூழலில் தான் புவனேஸ்வரிக்கு வேறு ஒரு நபருடன் திருமணத்தைத் மீறிய தொடர்பு இருப்பதாக பாலுவுக்குத் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமானது ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புவனேஸ்வரி தனியாகப் பிரிந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியால் தனது வாழ்க்கையை இழந்துவிட்டதாக எண்ணிய பாலு திடீரென்று ஆவேசம் அடைந்து மனைவியைத் தீர்த்துக்கட்ட முயன்றாக கூறப்படுகிறது. இதனால் தனது மாமியாரான பாரதி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு புவனேஸ்வரி இல்லாததால் ஆத்திரம் அடைந்த பாலு மாமியாரான பாரதியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து மனைவி புவனேஸ்வரி தன்னை பிரிந்து செல்வதற்குக் காரணமானவர் என்று கூறப்படும் விஜய் என்பவருடைய வீடு சோளிங்கர் அடுத்துள்ள கொண்டபாளையம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில் விஜய்யைக் கொலை செய்யத் திட்டமிட்டு பாலு சென்றுள்ளார். அங்கு விஜய் இல்லாததால் விஜய்யுடைய தந்தையான அண்ணாமலை மற்றும் தாய் ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் கொலை செய்யப்பட்ட மூவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள பாலுவைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கப்படும் என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.