மருத்துவ மாணவர்களின் 39 நாள் தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே இங்கேயும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் படிக்கும் இளநிலை,முதுநிலை மாணவர்கள் கடந்த அகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து சனிக்கிழமை வரை 39 நாட்கள் பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டம், உண்ணாவிரம் என்று நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அரசு செலவில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்ககூடாது என்று மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு தடை உத்திரவு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 39 ஆம் நாளான சனிக்கிழமை மாலை வரை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவு குறித்த நகலை மருத்துவ கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. இதனையறிந்த மாணவர்கள் நீதிபதியின் உத்திரவை ஏற்று 39 நாட்கள் நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். மேலும் மாணவர்களின் கோரிக்கைகளை நீதிபதி நிரைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர். பின்னர் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனவே இது எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று வெடிவெடித்து கோசங்களை எழுப்பினர். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து எங்களின் போராட்டம் அடுத்த கட்ட நிலைக்கு செல்லும் என்றார்கள். அனைவரும் திங்கள் கிழமை முதல் பணிக்கு செல்கிறார்கள்.
- காளிதாஸ்