Skip to main content

“பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு யாரும் உரிமை கோர முடியாது” - திருமாவளவன்

Published on 14/05/2025 | Edited on 14/05/2025

 

Thirumavalavan said that No one can claim the Pollachi case verdict

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி நேற்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த இந்த தீர்ப்புக்கு பெண்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வரவேற்பு அளித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், “பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” என்று அதிமுகவை கடுமையாக  விமர்சனம் செய்திருந்தார்.

அதேசமயம் பதிலுக்கு திமுகவை கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அந்த குற்றவாளிக் கூடாரத்தைக் கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே கிடைத்துள்ளது” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன், “பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு திமுக, அதிமுக, விசிக என யாரும் உரிமை கோருவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை.  இந்த வழக்கில் சான்றுகள் மற்றும் ஆதாரங்கள் வலுவாக இருந்தது. அதுதான் இந்த தீர்ப்புக்கு முக்கிய காரணம். அதனால் யாரும் உரிமை கோர முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்