தினகரன், புகழேந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது: சென்னை ஐகோர்ட்
தேசதுரோக வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்டோர் மீது கடந்த வாரம் சேலம் அன்னதானபட்டி காவல்துறையினர் தேசதுரோக வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தன் மீது பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதாலேயே தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக புகழேந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும் அந்த துண்டு பிரசுரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட பலரின் படங்களும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்த துண்டு பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றது தனக்கு தெரியாது எனவும், அதை யார் அச்சிட்டார்கள் என்ற விவரமும் தெரியாது என மனுவில் தெரிவித்துள்ளார். எனவே உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ் வரும் 24ஆம் தேதி வரை இந்த புகார் தொடர்பாக புகழேந்தி உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தி இந்த மனுதொடர்பாக காவல்துறை விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
சி.ஜீவா பாரதி