அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் அரசு என்பது மக்களுக்காக நடப்பதாகத் தெரியவில்லை; மாறாக, ஒருசிலர் அதைத் தங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வதாகப் படுகிறது! அதனால்தான் நாகைப் பொறையாறில் அரசு போக்குவரத்துப் பணிமனை இடிந்து ஒன்பது ஊழியர் மடிந்தனர்! இந்தக் கொடூரத்திற்கு அரசைக் குற்றம்சாட்டுவதோடு இதில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இதுபோல் இனி நிகழாதபடி தடுப்பு நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாறில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். இதில் 8 பேர் ஓட்டுநர்கள், ஒருவர் நடத்துனர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் யாரும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி தொடர்கிறது. இரவுப் பணி முடிந்து ஓய்வறையில் ஊழியர்கள் 20 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. அது பழமையான கட்டடம் என்று தெரிகிறது.
இதே போன்றதொரு நிகழ்வு கடந்த மாதம் கோவையில் ஏற்பட்டது. கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்துவிழுந்து 5 பேர் பொதுமக்கள் பலியாயினர்; பலர் படுகாயமடைந்தனர். இத்தனைக்கும் இந்த பஸ் நிலையம் 1997ல்தான் கட்டப்பட்டது. கோவை பஸ் நிலைய விபத்தை அடுத்து தமிழகமெங்கும் போக்குவரத்துக் கட்டடங்கள் தொடர்பாக பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்காததன் விளைவுதான் இந்தப் பொறையாறு பணிமனைப் பலிகள்!
மேலும் கடந்த ஓராண்டாகவே தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது. அப்படி அரசு என்ற ஒன்று இருப்பதாக அதில் அங்கம் வகிப்போர் சொல்வார்கள் என்றாலும், அது மக்களுக்காக நடப்பதாகத் தெரியவில்லை; மாறாக, அதைத் தங்களுக்காக மட்டுமே அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாகப் படுகிறது! அதன் காரணமாகவே கோவை சோமனூரிலும் நாகைப் பொறையாறிலும் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தக் கொடூரத்திற்கு அரசைக் குற்றம்சாட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதில் உயிரிழந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இதுபோல் இனி நிகழாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.