Skip to main content

50 லட்சம் கேட்டு மெட்ரோ ரயில்வே அதிகாரி மகன் கடத்தல்

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
50 லட்சம் கேட்டு மெட்ரோ ரயில்வே அதிகாரி மகன் கடத்தல்

50 லட்சம் கேட்டு மெட்ரோ ரயில்வே அதிகாரியின் மகனை மர்ம கும்பல் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். திருவொற்றியூர் ஜோதிநகர் 8வது தெருவை சேர்ந்தவர் அஜய்குமார். இவர் திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். இவருடைய மகன் அஸ்வின்குமார் (27). ஐடிஐ முடித்து விட்டு வேலையில்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அஸ்வின்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அஜய்குமார் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் கடந்த 8ம் தேதி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கங்கேஸ்வரன் வழக்கு பதிவு செய்து அஸ்வின்குமாரை தேடிவருகின்றனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் காணாமல் போன அஸ்வின்குமார் செல்போனில் இருந்து அவரது  தந்தைக்கு போன் வந்தது. காணாமல் போன மகன்தான் பேசுகிறான் என்று அவர் பதற்றத்துடன் பேசியபோது, அதில் வேறு ஒருவர் பேசினார். போனில் பேசிய நபர், உங்களது மகன் அஸ்வின்குமார் எங்களிடம் தான் உள்ளான்,  50 லட்சம் கொடுத்தால் அவனை விட்டு விடுகிறோம். இல்லையேல் கொலை செய்து விடுவோம். போலீசுக்கு சென்றால் உன் மகன் உயிரோடு இருக்க மாட்டான்’’ என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். 

இதையடுத்து போன் மூலம் கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியது குறித்து அஜய்குமார் சாத்தாங்காடு போலீசில் நேற்று தகவல் தெரிவித்தார். இதையடுத்து பேசிய செல்போன் டவர் சிக்னல் எங்கே இருந்து வந்துள்ளது என்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலமும் மகனை கண்டு பிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்