Skip to main content

மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!

Published on 20/10/2017 | Edited on 20/10/2017
மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதிக்கு உட்பட்ட சென்னம்பட்டி மலைக்கிராமத்தில் சிலர் மான் வேட்டையாட முயற்சி செய்வதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர், அதிரடிப்படை வீரர்கள் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதி காட்டுக்குள் எட்டு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றுள்ளனர். வனத்துறையினர் அவர்களை விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தியதில்,

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது-42), பாலு (வயது-46), கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரத்தைச் சேர்ந்த பச்சியண்ணன் (வயது-26), ரமேஷ் (வயது-18), கொமராயனூரை சேர்ந்த வாசன் (வயது-49), செல்வம் (வயது-50), சேலம் நகரிலுள்ள பாலமரத்தோட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது-49), கொளத்தூரைச் சேர்ந்த சண்முகராஜா (வயது-43) ஆகியோர் என்பதும், இவர்கள் மான் வேட்டைக்காக வனப்பகுதியில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்கள் எட்டுப் பேரையும் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாட வைத்திருந்த சுருக்கு கயிறு, வெடி மருந்து, தோட்டாக்கள் மற்றும் நான்கு நாட்டுத்துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தியூர் அருகே கோவிலூரில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சியை சமைப்பதாக பர்கூர் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறையினர் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒருவர் மான் இறைச்சியை சமைத்து கொண்டிருந்தார். அவரிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பெருமாள் (வயது-46) என்பது தெரியவந்தது.

மேலும், பர்கூர் வனப்பகுதியில் இருந்து செந்நாய் ஒரு மானை துரத்தி வந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் வைத்து அந்த செந்நாய் மானை கடித்துகொன்றது. அந்த வழியாக வந்த பெருமாள் இதை பார்த்துள்ளார். பின்னர் அவர் செந்நாயை துரத்திவிட்டு மானின் இறைச்சியை எடுத்துச்சென்று வீட்டில் சமைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவர் சமைத்த ஒரு கிலோ இறைச்சியும், காய வைத்து இருந்த 4 கிலோ மான் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன.

- சிவசுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்