Skip to main content

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற திமுக கோரிக்கை (படம்)

Published on 20/10/2017 | Edited on 20/10/2017
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற திமுக கோரிக்கை

இது குறித்து தி.மு.க புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா, எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுடன் கூட்டணியில் இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுக எப்போதும் தனித்தன்மையுடன் செயல்படும்.  ஆளும் காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை, மக்கள் நலனுக்காக எவ்வித தயக்கமும் இன்றி  உடனுக்குடன் திமுக சுட்டிக்காட்டி வருகிறது. சமீபகாலமாக காங்கிரஸ் அரசு மக்கள் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என பலவித வரியை மக்கள் மீது காங்கிரஸ் அரசு திணித்து வருகிறது. சட்டமன்றத்திலோ, அமைச்சரவையிலோ இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அறிவிப்பது மக்கள்  மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



(ஜிஎஸ்டி) சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பினால் புதுச்சேரியில் பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். மாதந்தோறும் இலவச அரிசி வழங்க முடியவில்லை. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முதலமைச்சரோ,  அமைச்சரோ இந்த அறிவிப்பை வெளியிடாமல் போக்குவரத்துத்துறை அதிகாரியை வைத்து இந்த  கட்டண உயர்வை வெளியிட செய்துள்ளனர். இந்த கட்டண உயர்வு அன்றாடம் கூலி வேலைக்கு சென்று  பிழைப்பு நடத்தும் ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும். புதுச்சேரியில் மற்ற மாநிலங்களை விட டீசல் விலை குறைவு, உதிரிபாகங்கள் விலையும் குறைவு, புதுச்சேரியில் இருக்கை வரியும் குறைவு இவ்வளவு  சலுகைகள் உள்ள நிலையில் 100 சதவீத கட்டண உயர்வு தேவையற்றது. இந்த பஸ் கட்டண உயர்வை  திமுக வன்மையாக கண்டிக்கிறது.

புதுச்சேரியில் ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த குழுஅமைக்கப்பட்டது. 3 முறை அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, பலவித அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதியில் யாருக்கும் பாதிப்பின்றி கட்டணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல பேருந்து கட்டண உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட  வேண்டும். குறைந்தபட்சமாக 20 சதவீத கட்டணத்தை உயர்த்தினால் போதும். எனவே பொதுமக்களுக்கு  கடும்பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இந்த பஸ் கட்டண உயர்வை  உடனடியாக காங்கிரஸ் அரசு வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் நலனுக்காக வீதியில்  இறங்கி போராட்டம் நடத்தவும் திமுக தயங்காது என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிவா எம்.எல்.ஏ தலைமையில் முதலமைச்சர் நாராயணசாமியை திமுகவினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்