Skip to main content

''அப்பப்பா என்னா வெயிலு... தாங்க முடியலப்பா'- காணாமல் போன கை ஏற்றம், கவலை ஏற்றம்!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

pudukottai

 

தமிழ்நாட்டில் ஆறுகளில் உள்ள மணலையும் காடுகளில் உள்ள மரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை கொண்டுபோன பிறகு கிட்டத்தட்ட 30, 40 வருஷத்துக்கு முன்னால் இருந்த கையேற்று, கவலை ஏற்றம் எல்லாமே காணாமல் போய் ஆயிரம் அடி ஆழத்திற்கு தண்ணீர் போய்விட்டது. ஆழ்குழாய் கிணறு அமைத்து கரண்ட் மோட்டாரை இறக்கி பட்டனை தட்டினால்தான் தண்ணீர் வந்து ஊற்றுகிறது. நிலத்தடி நீர் கீழே போகப்போக கையேற்று, கவலை ஏற்றங்களுக்கு தேவையான உருளைகட்டை, கயிறு, வாளி, காளை மாடுகளும் காணாமல் போய்விட்டது. இவையெல்லாம் அரிய பொருட்களின் படங்களாக தான் இப்போது காணமுடிகிறது. அந்தப் படங்களைப் பார்த்தாலும் அதற்கான நீண்ட விளக்கமும் சொல்ல வேண்டியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக இருந்தாலும் ஆலங்குடிக்கு கிழக்கே ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் நடக்கிறது. அதிலும் சில வருடங்களாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆலங்குடி - வடகாடு சாலையில் உள்ள கோயில்பட்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பே 300, 400 அடி ஆழ்குழாய் கிணறுகளில் கூட தண்ணீர் நின்றுவிட்டது. ஆனால் அதே ஊரில் உள்ள ஒரு பழைய செம்புரான் கல் கட்டிய கிணற்றில் ஒரு நாளும் தண்ணீர் வற்றியதில்லையாம். 20 அடி ஆழத்தில் பால் போல தண்ணீர் கிடக்கிறது.

 

சித்திரை கத்திரி வெயிலின் தாக்கத்தோடு வேகமாக வந்த 87 வயது நல்லதம்பி தாத்தா... ''அப்பப்பா என்னா வெயிலு, தாங்க முடியலப்பா'' என்று சொல்லிக் கொண்டே கிணற்றுப் பக்கம் போய் தோளில் போட்டு வந்த சின்னத் துண்டை கோவணமாக கட்டிக்கொண்டு கரையில் இருந்த வாளியை கிணற்றுக்குள் இறக்கி வேகவேகமா தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு அங்கே கிடந்த கல்லில் கையோடு கொண்டு வந்த சட்டையை துவைத்தார்.

 

pudukottai

 

என்னங்கய்யா வேகமாக வந்தீங்க இப்படி நின்னு குளிக்கிறீங்களே என்றோம்..

 

எனக்கு 87 வயசாகுது தம்பி, கிட்டத்தட்ட 70 வருசமா இந்த கிணத்துல தான் தண்ணி இறைச்சு குளிக்கிறேன். மோட்டார்லயும், குளத்துலயும் குளிப்பேன் ஆனா இந்த கிணத்துல குளிக்கிற சுகம் வேற எதுலயும் கிடைக்கிறதில்லை. ஊரெல்லாம் போர் கேணியில தண்ணி இல்லன்னு சொன்னப்ப கூட இந்த கேணியில தண்ணி வற்றலயே. பால் மாதிரி தண்ணி வரும். டவுன்ல தனி ரூமுக்குள்ள குளிக்கிறதைவிட இப்படி குளிக்கிறது எனக்கு புடிக்கும்'' என்றார் நல்லதம்பி தாத்தா.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

அதிகரிக்கும் வெப்பம்; செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

Published on 22/04/2024 | Edited on 23/04/2024
What to do? What not to do? on increasing heat in summer season

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

இதனிடையே, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்  மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், குழுந்தைகள் மற்றும் கால்நடைகளை வெளியே அழைத்து வருவதை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பின்வருமாறு காண்போம்.

வெப்பத்தைத் தனித்துக்கொள்ள தாகம் எடுக்கவில்லை என்றாலும், பொது மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தால் மயக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார குழுவினர் கூறுகின்றனர். ஒருவேளை அவசர வேளையாக வெளியே செல்ல நேரிட்டால், வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதே வேளையில், பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது போன்றவற்றை தவிர்த்துவிட்டு மோர், எலுமிச்சை, தண்ணீர் போன்ற வீட்டில் செய்யக்கூடிய பானங்களைக் குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனையடுத்து, நண்பகலில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ இல்லாமல் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலை தாக்கத்தின் போது, புரதச் சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல் சோர்வுற்றாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனச் சுகாதார துறையினர் கூறுகின்றனர். மேலும், வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வெளியே கட்டி போடாமல் நிழலில் கட்டி வைக்க வேண்டும்.

அந்தப் பிராணிகளுக்கும் அதிக தண்ணீரை கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், வீட்டை அடிக்கடி தண்ணீர் மூலம் சுத்தம் செய்து குளிர்ச்சியாக வைக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொது மக்கள் மேற்கொண்டால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.